

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பது தேவையில்லாத ஒன்று என சீனா விமர்சித்துள்ளது.
ஹாங்காங் விவகாரத்தில் எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அமெரிக்கா, ஹாங்காங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதா ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதவில் ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போலீஸாருக்கு கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டக்கார்களுக்கு ஆதரவாக ட்ரம்ப் கையெழுத்திட்ட மசோதாவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “இது நிச்சயம் அடிப்படையான சர்வதேச உறவுகளைப் பாதிக்கும் செயல். இதனை சீன அரசும், சீன மக்களும் எதிர்க்கின்றனர். இது தேவையற்ற மசோதா. இது ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். அமெரிக்காவின் மசோதா மோசமான உள் நோக்கங்களைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதனைத் தொடர்ந்து சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக ஹாங்காங் இணைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே ஹாங்காங் விளங்கி வருகிறது.
ஹாங்காங்கை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா அங்கீகரித்த போதிலும், ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராகக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.