Published : 28 Nov 2019 02:10 PM
Last Updated : 28 Nov 2019 02:10 PM

போலி பல்கலைக்கழகம்: குடியேற்ற மோசடிகளைத் தடுக்க வைத்த பொறியில் சிக்கிய இந்தியர்கள்; அமெரிக்காவின் கைது நடவடிக்கைக்கு கண்டனம்

குடியேற்ற மோசடிகளைக் கண்டுபிடிக்க வைத்த பொறியில் அதிக இந்தியர்கள் கைதாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரியிலிருந்து படிப்படியாக 250 பேர் கைது செய்யப்பட்டு கடைசியாக மேலும் 90 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசின் சட்டக் குடியேற்றம் மற்றம் அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் செனட்டர் எலிசபெத் வாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படிக்கவும் பணியில் சேரவும் அமெரிக்கா தனது வாசலை, உலகத்தை நோக்கித் திறந்து வைத்துள்ளது. இதனால் பயனடைந்தவர்களில் இந்தியர்கள் அநேகம். அதேநேரம் உலகம் முழுவதிலும் இருந்து வருபவர்களில் சிலர் சரியான பாதையில் வராமல் குறுக்கு வழியில் அமெரிக்காவுக்குள் நுழைவதையும் அமெரிக்கா தடுத்து வருகிறது. எனினும் அதையும் மீறி அமெரிக்காவுக்குள் சிலர் முறைகேடாக நுழைந்து விடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதற்காக அமெரிக்கா ஒரு நூதன செயல் திட்டத்தை ரகசியமாக அமல்படுத்தியது. ஒரு போலி பல்கலைக்கழகத்தை அமெரிக்க அரசாங்கமே நிறுவியது. இதன் மூலம் குடியேற்ற மோசடிகளைக் கண்டுபிடிக்க முடியும் என அமெரிக்கா கருதியது. இதற்காக கடந்த 2015-ல் ஐசிஇ ஒரு போலி பல்கலைக்கழகத்தை டெட்ராய்ட் பெருநகரப் பகுதியில் உள்நாட்டுப் பாதுகாப்புததுறை மூலம் நிறுவத் திட்டமிட்டது. ஃபார்மிங்டன் மலைப்பகுதியில் அமைந்ததால் இதற்கு ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் என்று ஒரு போலியான பெயரும் வைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இப்பல்கலைக்கழகத்தில் 600 மாணவர்கள் இருந்தனர்.

இதுகுறித்து டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ''ஃபார்மிங்டன் போலி பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டவர்களின் ஆவணங்களை பேப்பர் சேசிங் ஆபரேஷன் திட்டப்படி அமலாக்கத் துறை சரிபார்த்தது. இதன் மூலம் இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவர்கள் என்ற பெயரில் மாணவர் விசா எடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் இந்தியர்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐ.சி.இ) இதுவரை 250க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைது செய்துள்ளது. இவர்கள் மாணவர் விசா பெற்று வந்து சட்டவிரோதமாக இங்கேயே தங்கியிருப்பவர்கள்'' என்று தெரிவித்துள்ளது.

இன்னொரு பக்கம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல அப்பாவிகள் என்று கூறப்பட்டு வருவதால் இப்பிரச்சினை தற்போது பூதாரகரமாக வெடித்துள்ளது. வலைதளங்களில் அமெரிக்க அமலாக்கத் துறையைக் கண்டித்து ஏராளமான பதிவுகள் நேற்று காணப்பட்டன. ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் #AbolishICE ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் அமலாக்கத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''கடந்த ஜனவரியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை 250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு, அவர்களாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கு இறுதி உத்தரவு வழங்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

வகுப்புகள் இல்லாததால் இது ஒரு போலி பல்கலைக்கழகம் என்று மாணவர்கள் இப்போது உண்மையைத் தெரிந்துகொண்டதாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் கணிசமானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழங்கிய செல்லுபடியாகும் விசாவில் சட்டபூர்வமாக அமெரிக்காவிற்கு வந்தவர்கள்.

இதுகுறித்து டெக்சாஸ் வழக்கறிஞரான ராகுல் ரெட்டி, டெட்ராய்ட் ஃப்ரீ ஜர்னலிடம் கூறுகையில், ''அமெரிக்கா சட்டபூர்வ குடியேற்ற நிலையைப் பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கையால் சில அப்பாவிகள் இதில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. அவர்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்'' என்றார்.

மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர்ஞகள் 8 பேர் தங்கள் லாபத்திற்காக விசா மோசடி செய்து, வெளிநாட்டினருக்கு அடைக்கலம் தரும் வகையில் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறைக்கு அதிபர் வேட்பாளர் கண்டனம்

ஜனநாயகக் கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளர் செனட்டர் எலிசபெத் வாரன் இந்த நடவடிக்கை கொடூரமானது என்று விமர்சித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், ''இது கொடூரமானது மற்றும் திகிலூட்டும் செயல். இந்த மாணவர்கள் அமெரிக்கா வழங்கக்கூடிய உயர்தர உயர் கல்வியைப் பெற வேண்டும் என்று கனவு கண்டார்கள். ஐ.சி.இ அவர்களை நாடு கடத்த, அவர்களை ஏமாற்றி, சிக்க வைத்தது'' என்று வாரன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x