

காமன்வெல்த் நாடாளுமன்ற, சட்டப்பேரவை சபாநாயகர்களின் மாநாட்டுக்கு காஷ்மீர் சட்டப் பேரவை சபாநாயகரை அழைக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லா மாபாதில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை சபா நாயகர்களின் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பல்வேறு மாநிலங்களின் சட்டப் பேரவை சபாநாயகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காஷ்மீர் சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீகவிந்தர் குப்தா வுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப் படவில்லை. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் டெல்லியில் கடந்த 7-ம் தேதி சபாநாயகர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 31 மாநிலங்களின் சட்டப் பேரவை சபாநாயகர்கள் பங்கேற்ற னர். காஷ்மீர் சபாநாயகருக்கு அழைப்பு அனுப்பப்படாததால் இஸ்லாமாபாத் மாநாட்டை புறக் கணிக்க இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் மறுப்பு
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் கூறியதாவது: பாகிஸ் தானை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி ஆகும். அந்த மாநில சட்டப் பேரவையை நாங்கள் அங்கீகரிக்க வில்லை, எனவே அம்மாநில சபாநாயகருக்கு அழைப்பு கடிதம் அனுப்பமாட்டோம். இஸ்லாமாபாத் மாநாட்டில் பங்கேற்க 70 சதவீதம் பேர் உறுதி அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்து பாகிஸ் தானுக்கான இந்தியத் தூதர் டி.சி.ஏ. ராகவன் பாகிஸ்தான் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், காஷ்மீர் மாநில சபாநாயகருக்கு அழைப்பு அனுப்பப்படாதது துரதிருஷ்டவசமானது, அந்த வகையில் பாகிஸ்தான் அரசு மரபு களை மீறியுள்ளது, எனவே இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக் கும் என்று கூறினார்.