Published : 15 Aug 2015 11:10 AM
Last Updated : 15 Aug 2015 11:10 AM

உலக மசாலா: விநோத ரசிகர்

ரொனால்டாவின் விநோத ரசிகர்!

நட்சத்திரக் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் 17 வயது ஷாண்டாவைப் போல் ஒரு ரசிகரை பார்த்திருக்க முடியாது. டென்மார்க்கைச் சேர்ந்தவர் ஷாண்டா. பல லட்சம் ரூபாய்களைச் செலவு செய்து தன்னை ஒரு ரொனால்டோவாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தலை முடி, உடைகள், நடப்பது, பேசுவது என்று ஒவ்வொரு விதத்திலும் ரொனால்டோவை அப்படியே செய்து காட்டுகிறார். தன்னுடைய பெயரையும் ஷாண்டா ரொனால்டோவாக மாற்றிக்கொண்டு விட்டார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் அணிக்காக ஆடிவரும் ரொனால்டோவை இந்த ஆண்டு மட்டும் 5 முறை சந்தித்துவிட்டார் ஷாண்டா.

நல்லது நடந்தால் சரி...

அமெரிக்காவின் டெக்சாஸில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜோஸ்டென் பண்டி என்பவர் எலிஸபெத் ஜேனஸ் என்பவரைக் காதலித்து வந்தார். எலிஸபெத்தின் முன்னாள் காதலர் எலிஸபெத்தைப் பற்றித் தரக்குறைவாக பண்டியிடம் பேசினார். உடனே பண்டிக்குக் கோபம் வந்தது. இருவருக்கும் சண்டை ஆரம்பித்து, இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இருவருக்கும் காயம். பண்டி மருத்துவமனையை நாடிச் சென்றார். முன்னாள் காதலர் நீதிமன்றம் சென்றுவிட்டார். வழக்கை விசாரித்தார் நீதிபதி.

“நான் நான்கு சகோதரிகளுடன் வளர்ந்தவன். யாராவது பெண்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசினால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது’’ என்றார் பண்டி. திடீரென்று நீதிபதி பண்டியிடம், “எலிஸபெத்தை 30 நாட்களுக்குள் திருமணம் செய்துகொள்கிறாயா, அல்லது 15 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கிறாயா?’’ என்று கேட்டார். பண்டியும் எலிஸபெத்தும் அதிர்ந்து போனார்கள். தவறு செய்தவனை விட்டு, தங்களுக்குத் தண்டனை தருவதாக நினைத்தனர். 15 நாட்கள் சிறையில் இருந்தால் பண்டியின் வேலையும் பறிபோய்விடும். இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னார்கள். வழக்கு முடிவுக்கு வந்தது. “எங்கள் திருமணம் பற்றி ஒரு கனவு இருந்தது. இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் அதைச் செயல்படுத்த முடியாது. தற்போது அதற்கான பணமும் இல்லை. எளிமையாகத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எதிர்காலத்தில் பணம் சேர்த்த பிறகு, விமரிசையாகத் திருமணத்தைக் கொண்டாடிக்கொள்கிறோம்’’ என்கிறார் பண்டி.

ரோபோக்களால் செலவு மிச்சம்

ஜப்பானில் உள்ள ஹென் நா தங்கும் விடுதியில் வேலை செய்பவர்கள் அனைவருமே ரோபோக்கள். விடுதிக்குள் நுழைந்தவுடன் டைனோசர் ரோபோ வரவேற்கிறது. ஆங்கிலத்தில் தங்கும் விவரங்களைக் கேட்கிறது. பிறகு ரிஜிஸ்டரில் கையெழுத்து இடச் சொல்கிறது. அருகில் இருக்கும் பெண் ரோபோ, திரையில் முகத்தைப் பதியச் சொல்கிறார். பிறகு ஒரு ரோபோ பெட்டிகளை எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்கிறது. இன்னொரு ரோபோ உணவையும் பழச்சாற்றையும் வைத்துவிட்டுச் செல்கிறது. மொத்தத்தில் மனிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த விடுதியில் ரோபோக்களே செய்துவிடுகின்றன. மனிதர்கள் இல்லை என்ற குறையே தெரியவில்லை. எந்தவிதமான அசெளகரியத்தையும் உணரவில்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். ரோபோக்களால் செலவும் மிச்சம், விடுமுறையும் எடுப்பதில்லை என்கிறார்கள் விடுதி உரிமையாளர்கள்.

ம்ம்... ஐசக் அசிமோவ் கதையில் வருவது போல ரோபோக்கள் ஒருநாள் சிந்திக்கப் போகின்றன…!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x