ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தாக்குதல்: 8 பேர் பலி

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தாக்குதல்: 8 பேர் பலி
Updated on
1 min read


ஏமனில் சவுதிப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் கூறும்போது, “ஏமனில் துறைமுக பகுதியான ஹோடைட்டாவில் சவுதி கூட்டு படைகள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ராணுவ தளங்களை குறிவைத்தும் சவுதி படைகள் கடுமையான தாக்குதலை நடத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த இரு வாரங்களாக ஏமனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதை ஏமன் கூட்டுப் படைகள் 80 சதவீதம் நிறுத்திவிட்டன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த நிலையில் மீண்டும் ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in