ஹாங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தல்: ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி

ஹாங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தல்: ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி
Updated on
1 min read

ஹாங்காங்கில் நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

திங்கட்கிழமை வெளியான ஆரம்ப முடிவுகளில் அரசுக்கு ஆதரவான பிரதிநிதிகள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ''ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 30 லட்சம் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்தத் தேர்தலில் சுமார் 95% ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவு குறித்து அரசியல் வல்லுநர் ஒருவர் கூறும்போது, “ ஜனநாயகப் பிரதிநிதிகளுக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி. 18 மாவட்டங்களில் அவர்கள் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி மூலம் ஹாங்காங் தலைவர் கேரி லேமுக்கு வலுவாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள்” என்றார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மதிப்பதாக கேரி லேம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே விளங்கி வருகிறது.

இந்நிலையில், கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது.

இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். எனினும் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கவுன்சில் தேர்தலில் பெரும் வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in