

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் விமானம் ஒன்று மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 29 பேர் பலியாகினர்.
இதுகுறித்து காங்கோ அதிகாரிகள் தரப்பில், ''காங்கோவின் கோமா நகரில் சிறிய விமானமான ’டோர்னியர் - 22’ வீடுகளுக்கு இடையே மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் 29 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் கடுமையான புகைமூட்டம் காணப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானம் கோமா நகரிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெனி நகருக்குச் செல்லும்போது குடியிருப்புப் பகுதிகளில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விமான ஓட்டியின் தவறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விமானத்தில் உள்ள இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.