

செல்போனில் தன்னைத் தானே புகைப்படம் எடுக்கும் ‘செல்பி' முறை, உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில் செயற்கைக்கோள் கேமரா மூலம் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட ‘செல்பி’ வைரலாகி வருகிறது. ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஏர்பஸ் டிபென்ஸ் அண்ட் ஸ்பேஸ்' நிறுவனம், விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் செல்பி புகைப்படம் எடுக்கும் வசதியை அண்மையில் அறிமுகம் செய்தது.
இந்த நிறுவனம் சார்பில் விண்வெளியில் 50 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலகம் முழுவதும் வாழும் மக்கள் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி அந்தோணி கூறியதாவது:
எங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலக மக்கள் இலவசமாக செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக spelfie என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம்.
இந்தோனேசியாவின் பாலி தீவு கடற்கரையில் இசபெல் என்பவரின் தலைமையில் அண்மையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுமார் 36,000 கி.மீ.-க்கு அப்பால் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் எங்களது செயற்கைக்கோள் மூலம் இந்த நிகழ்ச்சியை செல்பி புகைப்படம் எடுத்துக் கொடுத்தோம்.
எங்களது செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூமியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோர் எங்களது செயலியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். எங்கள் செயற்கைக்கோள் அவர்கள் இருக்கும் பகுதியை கடக்கும் நேரத்தை தெரிவிப்போம். அந்த நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தினால் செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் செல்பி புகைப்படம் எடுத்துக் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.