

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் பொதுமக்கள் பலியானதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள டல் அப்யாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதலை குர்து படையினர் நடத்தியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் இதே பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு கார் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர்.
முன்னதாக, சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்து படையினர் பின்வாங்கினர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி நடத்திய வன்முறை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். மேலும், சிரிய - துருக்கி எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன.