

இராக்கில் சமீபத்தில் நடந்த வன்முறையில் 2 பேர் பலியாகினர். 40 பேர் வரை காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் உள்துறை அமைச்சகம் தரப்பில், “இராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக ராஷித் தெருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது . இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக்கின் ஷியா முஸ்லிம்களின் மூத்த தலைவர் அயோதெல்லா அலி சிஸ்தானி, இராக்கில் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்தி பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகினர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இராக்கில் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்த, போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று இராக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.