

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாண்டாண்டர் நகரில் போலீஸ் நிலையம் அருகே வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 3 போலீஸார் பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குண்டுவெடிப்பு ஏற்பட்ட பகுதி கொலம்பியாவில் கடத்தல் தொழில்கள் நடைபெறும் முக்கிய பகுதி என்று கொலம்பியா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் கொலம்பியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வியாழக்கிழமை சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமையும் கொலம்பியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.