Last Updated : 21 Nov, 2019 04:53 PM

 

Published : 21 Nov 2019 04:53 PM
Last Updated : 21 Nov 2019 04:53 PM

சியாச்சின் பகுதியை இந்திய சுற்றுலாவுக்காக திறக்க முடியாது: பாகிஸ்தான் அறிவிப்பு

உலகின் மிக உயர்ந்த போர்க்களப் பகுதியான சியாச்சின் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக விளங்குவதால் இந்தியா சுற்றுலா தொடங்குவதற்காக வழிதர முடியாது என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.

சியாச்சின் தரைப்பகுதி முகாமில் இருந்து குமார் போஸ்ட் வரை சுற்றுலா நோக்கங்களுக்காக முழு பகுதியையும் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த அக்டோபர் 21 ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியான இச்செய்திக்கு பதிலளிக்கும் விதமாக சியாச்சினில் இந்தியா சுற்றுலாப்பகுதியாக அறிவிப்பதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் ஊடகத்தினரிடம் கூறியதாவது:

"சர்ச்சைக்குரிய பகுதியாக சியாச்சின் உள்ளது. ஆனால் இங்கு இந்தியா சுற்றுலாவைத் தொடங்கப்போவதாகக் கூறுகிறது. இந்தியா சியாச்சின் பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது. சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவில் இருந்து நல்ல அல்லது சாதகமான எதுவும் நடக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை.

அப்படியிருக்க, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான பிரச்சினையில் சிக்கியுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இந்தியாவுக்காக எப்படி சுற்றுலா செல்ல வழிவிடமுடியும்?

குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த மாதம் திறக்கப்பட்ட கர்தார்பூருக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு இந்தியா தடைகளை ஏற்படுத்தி வருகிறது. சீக்கிய குருத்வாராவை பார்வையிட 5,000 பேர் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைவான பக்தர்களே வந்தனர்.''

இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நகரமான நரோவாலில் உள்ள சீக்கிய மதத்தின் புனிதமான ஆலயங்களில் ஒன்றைப் பார்வையிட இந்திய யாத்ரீகர்களுக்கு வருகை தருவதற்காக கர்தார்பூர் நடைபாதையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 9 அன்று திறந்து வைத்தார்,

இந்த நடைபாதை இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தை பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்போடு இணைக்கிறது, இது சீக்கிய நம்பிக்கையின் நிறுவனர் குரு நானக்கின் இறுதி ஓய்வு இடமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x