

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கிழக்கில் லோகர் மாகாணத்தில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகினர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எதிரிகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெறவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள்தான் நடத்தி இருக்கிறார்களா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆப்கனில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஆப்கன் படைகளுக்கு ஆதரவாக 14,000 அமெரிக்க வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
2001-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 2,400 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்தில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.