

பிரேசிலின் மழைக்காடுகளை அழிக்கும் செயல் கடந்த 11 ஆண்டுகளில் உயர்மட்ட நிலையை அடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அறிக்கையை வெள்ளிக்கிழமை பிரேசில் அரசு வழங்கியுள்ளது.
பிரேசில் அரசு வழங்கிய இந்த தரவுகள் பிரேசிலின் 9 மாகாணங்களில் மதிபிடப்பட்ட காடழிப்புக்களின் விகிதங்களை உள்ளடங்கியது என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சூழலியல் விரோதப் போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணி நேரத்திலேயே, வனக் கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து, அமேசான் அழிக்கப்படுவதற்கான தொடக்கப்புள்ளியை வைத்தார்.
மேலும், அமேசான் காடுகளை நியாயமான அளவில் பிரேசிலின் பொருளாதாரத் தேவைகளுக்காக சுரண்டிக்கொள்ளலாம் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் காடழிப்பு 11 ஆண்டுகளாக கணிசமான அளவில் தொடர்ந்து கொண்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீ காரணமாக அமேசான் காடுகள் தீக்கு இரையாகின. அப்போது பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அமேசாம் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உதவ தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை பிரேசில் அதிபர் போல்சினோரா நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியின் நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள அமேசான் காடு, பூவுலகின் தாவரங்கள், உயிரின வகைகளில் பாதியைக் கொண்டுள்ளன. உலகின் நுரையீரலாக அம்சான் காடுகள் உள்ளன .
40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் என மாபெரும் உயிரினப் பன்மை மையமாக அமேசான் திகழ்கிறது.