Published : 19 Nov 2019 11:19 AM
Last Updated : 19 Nov 2019 11:19 AM

தென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும்: வடகொரியா

அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கு தென்கொரியாவுடன் அந்நாடு நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருந்த கூட்டு ராணுவப் பயிற்சியைத் தள்ளிவைப்பதாக அமெரிக்காவும், தென்கொரியாவும் தெரிவித்தன.

இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள வடகொரிய மூத்த அதிகாரி கிம் யாங் ஜோல் கூறும்போது, “கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைப்பது என்பது பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்துவதால் கொரிய தீபகற்பத்தில் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படாது. மேலும் இது ராஜதந்திர முயற்சிகளுக்கு உதவாது. தந்திரமான அமெரிக்காவுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அமெரிக்கா தனது விரோதப்போக்குக் கொள்கையை முற்றிலுமாகத் திரும்பப் பெறும்வரை பேச்சுவார்த்தைக்கு வடகொரியா திரும்பப் போவதில்லை” என்றார்.

அமெரிக்கா - தென்கொரியா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி சண்டைக்கான முன்னோட்டம் என்று வடகொரியா பலமுறை எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் காரணமாக அமெரிக்காவும் தென்கொரியாவும் தங்கள் கூட்டு ராணுவப் பயிற்சியை பலமுறை ஒத்திவைத்தன.

அமெரிக்கா - வடகொரியா மோதல்

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரியில், வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் ட்ரம்ப் மற்றும் கிம் ஆகியோருடைக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x