நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்

நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் கடுமையாக பாதிப்படைகிறது: ஆய்வில் தகவல்
Updated on
2 min read

நாளொன்றுக்கு 5 மணி நேரங்களுக்கும் மேலாக தொலைக்காட்சி பார்ப்பதால் நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 5 அல்லது அதற்கும் கூடுதலான மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்ப்பது நுரையீரலின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நுரையீரலின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் pulmonary embolism என்ற நோய் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 86,000 பேரின் அன்றாட நடவடிக்கைகள், உடல்நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றினால் நுரையீரலின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது, இது உயிருக்கு ஆபத்தான விவகாரம் போன்ற விவகாரங்கள் தெரியவந்தது.

இப்போதெல்லாம் இகானமி வகுப்பில் நீண்ட நேரம் விமானப் பயணம் மேற்கொள்வதும் நுரையீரல் முக்கிய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட முக்கியக் காரணாகி வருகிறது.

நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் காலில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த ரத்தக் கட்டு காலிலிருந்து நகர்ந்து நுரையீரலுக்கு இடம்பெயரும் தன்மை கொண்டது. இதற்கு venous thromboembolism என்று பெயர்.

இதனால் நெஞ்சு வலி, மூச்சு விடுதலில் கடும் சிரமம், இருதய துடிப்பு அதிகரித்தல், மூச்சிறைத்தல் ஆகியவை ஏற்படுகிறது. பல்மனரி எம்பாலிஸம் என்ற நிலை தீவிரமடைந்தால் ரத்த அழுத்தம் கடுமையாக குறையவும் வாய்ப்புள்ளது, மேலும் உடனடியான மரணமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த ஆய்வாளர்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்வோரை 2.5 மணிக்கு குறைவாக டிவி பார்ப்பவர்கள், 2.5 மணி முதல் 4.9 மணிநேரம் டிவி பார்ப்பவர்கள் மற்றும் 5 அல்லது அதற்கு மேலான மணி நேரங்கல் டிவி பார்ப்பவர்கள் என்று பிரித்து ஆய்வு மேற்கொண்டனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 5 மணி நேரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் டிவி பார்ப்பவர்களுக்கு மரண அபாயம் உள்ள நுரையீரல் அடைப்பு ஏற்படும் ரிஸ்க் இருமடங்கு இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்தது. அதாவது நாளொன்று இரண்டரை மணி நேரங்கள் டிவி பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை விட 5 மணி நேரம் டிவி பார்ப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்.

இந்த ஆய்வை நடத்திய குழுவை சேர்ந்த ஷிராகவா என்பவர் கூறும்போது, “நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தல் என்பது நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு என்ற ஆபத்து ஏற்பட்டு உயிருக்கும் கேடு விளைவிக்கும்.

எனவே நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுக்க, இடையிடையே எழுந்து, நடந்து, வேறு வேலைகளில் ஈடுபடுவதோடு, இடைவேளை விட்டு பார்ப்பது நல்லது. பொதுவாக நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆர்வமாகப் பார்க்கும் போது தண்ணீர் கூட அருந்தாமல் இருப்போம், எனவே இடையிடையே எழுந்து சென்று தண்ணீர் அருந்துவதும் ஒரு தேவையான இடைவேளையை அளிக்கும்” என்று ஆலோசனை வழங்குகிறார்.

அதே போல் கணினி விளையாட்டுகளில் நீண்ட நேரம் ஈடுபடுவதும் நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறும் இந்த ஆய்வு, ஸ்மார்ட் போன்களால் இத்தகைய ஆபத்து இருப்பது பற்றி இன்னமும் தங்களுக்கு எதுவும் தெரியவரவில்லை என்று தெரிவித்தனர்.

இந்தக் கண்டுபிடிப்புகள், ஐரோப்பிய இருதயவியல் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in