Published : 18 Nov 2019 11:18 AM
Last Updated : 18 Nov 2019 11:18 AM

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்: 38 பேர் பலி

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “எரிபொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக தியாகிகள் சதுக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கலவரக்காரர்களை அடக்க பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 36 பேர் பலியாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு அந்நாட்டின் மூத்த மதகுரு அயதுல்லா அலி காமெனி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, “ நான் இந்த துறையில் ஒரு நிபுணர் அல்ல, எனினும் நாடாளுமன்றம், நீதி, நிர்வாகம் இம்மூன்று துறைகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை ஆதரிப்பேன். மேலும் அரசின் இந்த முடிவு நாட்டின் பொருளாதார நிலைக்கு உதவும் ” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விலை உயர்வு மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவ முடியும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது அவ்வப்போது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதன் காரணமாக ஈரான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x