Last Updated : 16 Nov, 2019 11:57 AM

 

Published : 16 Nov 2019 11:57 AM
Last Updated : 16 Nov 2019 11:57 AM

மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானம்; உரிய நேரத்தில் உதவிய பாகிஸ்தான்

பிரதிநிதித்துவப் படம்

இஸ்லாமாபாத்

கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் பாகிஸ்தான் வழிநடத்தி உதவிய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.

பாகிஸ்தானில் தற்போது கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இரண்டே நாட்களில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஜெய்ப்பூரிலிருந்து பாகிஸ்தான் வழியாக மஸ்கட் பறந்த இந்திய விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி பின் மீட்கப்பட்டதாக ஜியோ நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் இந்திய நகரமான ஜெய்ப்பூரிலிருந்து மஸ்கட்டிற்கு பறந்து கொண்டிருந்த விமானம் திக்கு தெரியாமல் தடுமாறியபோது, உரிய நேரத்தில் வழிநடத்தி ஆபத்திலிருந்து மீட்டெடுத்தார். இது முற்றிலும் எமர்ஜென்சி விமானப் போக்குவரத்து உதவியாக வழிநடத்தப்பட்ட ஒன்று ஆகும்.

பாகிஸ்தானில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்திய விமானம், கராச்சி பிராந்தியத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. நடுவானில், அது பல மின்னல்களுடன் ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான வானிலையில் திடீரென சிக்கியது.

மின்னல் தாக்கப்பட்ட விமானம் 36,000 அடி உயரத்தில் இருந்து 34,000 அடியாக உடனடியாக உயரம் தாழ்ந்தது. இதன் விளைவாக, பைலட் அவசர நெறிமுறையைத் தொடங்கி, அருகிலுள்ள நிலையங்களுக்கு ‘மேடே’ ஒளிபரப்பினார்.

'மேடே' (mayday) என்பது பெரும்பாலும் எந்த விமானியும் அல்லது கப்பல் கேப்டனும் செய்ய விரும்பாத ஒரு அழைப்பு. 'மேடே' என்பது வானொலி தகவல் தொடர்புகள் வழியாக ஒரு துயர அழைப்பைச் செய்ய உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சொல். 'மேடே' உயிருக்கு ஆபத்தான அவசரத்தை சமிக்ஞை செய்கிறது. பொதுவாக ஒரு கப்பல் அல்லது விமானத்தில், இது வேறு பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம்.

விமானத்தின் தலைமை விமானியின் 'மேடே' அழைப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் உடனடியாக செவி சாய்த்தார். பாகிஸ்தானிய வான்வெளியில் பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் அடர்த்தியான விமானப் போக்குவரத்து வழியாக அதை இயக்க உதவினார்.

தெற்கு சிந்து மாகாணத்தின் சோர் பகுதி அருகே இந்த விமானம் அசாதாரண வானிலையைச் சந்தித்ததாக விமானப் போக்குவரத்து ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் உதவிய ஜெய்ப்பூர் மஸ்கட் விமானத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

இஸ்லாமாபாத், ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மீதான எதிர்ப்பாக இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை அணுகுவதைத் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x