Published : 16 Nov 2019 10:32 AM
Last Updated : 16 Nov 2019 10:32 AM

இலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு

கொழும்பு

இலங்கையில் அதிபர் தேர்தலையையொட்டி வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள், ”இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியான மன்னாரில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரம் இல்லை. மேலும் தாக்குதல் நடத்தியவர் சாலையில் வாகனங்களின் டயர்களையும் எரித்துள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இலங்கையின் 8-வது அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று (சனிக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித்பிரேமதாச உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் குணரத்னம், மக்கள் விடுதலை முன்னணியின் அநுர குமார திசநாயக்க, இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உட்பட மொத்தம் 35 பேர் போட்டியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x