

சிரியாவில் முன்பு அமெரிக்க படைகளின் ராணுவ தளம் இருந்த இடத்தில் தற்போது ரஷ்யா தனது ஹெலிகாப்டர்களையும், படையினரையும் இறக்கி உள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ராணுவம் தரப்பில், “சிரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கமிஷிலி பகுதியில் முன்பு அமெரிக்க ராணுவ தளம் இருந்த இடத்தில் ரஷ்யா தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கு தாக்குதலுக்காக ஹெலிகாப்டர்களும், ரஷ்ய படையினரும் நிறுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் வடக்குப் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் அபாயப் பகுதியான இட்லிப்பில் சிரிய ராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கவுள்ளதாக சிரிய அதிபர் ஆசாத் தெரிவித்தார்.
சிரியாவுடன் இணைந்து ரஷ்யப் படைகளும் தாக்குதல் தொடுக்க உள்ளன.
முன்னதாக சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தும் என அ ந் நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்ததத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்க படைகளை ட்ரம்ப் வாபஸ் பெற்றார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது