Published : 15 Nov 2019 05:13 PM
Last Updated : 15 Nov 2019 05:13 PM

122 ரோஹிங்கியா முஸ்லிம்களை மீட்ட வங்கதேச கடற்படை

வங்காள விரிகுடாவில் படகுக் கோளாறு காரணமாக மாட்டிக்கொண்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் 122 பேரை வங்கதேசக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து வங்கதேசக் கடற்படை வெள்ளிக்கிழமை கூறும்போது, “சட்டவிரோதமாக மலேசியாவுக்குச் செல்லவிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்து வந்த படகில் கோளாறு ஏற்பட்டதால், வங்காள விரிகுடா கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக மீனவர்கள் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற எங்கள் கடற்படை 122 ரோஹிங்கியா முஸ்லிம்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 58 பேர் பெண்கள். 47 பேர் ஆண்கள். 17 பேர் சிறுவர்கள்” என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் வங்கதேசக் காவல் படை மற்றும் கடற்படை சட்ட விரோதமாக மலேசியா செல்லவிருந்த 500 ரோஹிங்கிய முஸ்லிம்களைத் தடுத்துள்ளது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த விவகாரம் தொடர்பாக ஆங் சான் சூச்சிக்கு உலக அரசியலில் அவப் பெயர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x