

பாகிஸ்தானில் கடுமையான மழை பெய்து வருவதை அடுத்து ஊரகப் பகுதிகளில் மின்னல் தாக்கி 20 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் நடந்த இந்த உயிரிழப்புகள் குறித்து டான் செய்தி ஊடகம் கூறியுள்ளதாவது:
''பாகிஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் புதன் அன்று பரவலான மழை பெய்யத் தொடங்கியது. தார்பர்கர் மாவட்டத்தில் மிதி, சாச்சி மற்றும் ராம் சிங் சோடோ கிராமங்களில் நேற்று பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களிலும், அதைத் தொடர்ந்த தீ விபத்திலும் நூற்றுக்கணக்கான விலங்குகள் அழிந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
புதன்கிழமை இரவு மூன்று பேர் பலியான நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு பெய்த கடும் மழையில் மின்னல் தாக்கி 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
மின்னல் தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மிதி, இஸ்லாம்கோட் மற்றும் சாக்ரோ நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு டான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.