

குல்பூஷண் ஜாதவ் வழக்குத் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான அனைத்து முடிவுகளும் பாகிஸ்தான் சட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
குல்பூஷண் ஜாதவ் சீவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக போலியான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இதனை பாகிஸ்தான் ராணுவம் மறுத்த நிலையில் இதற்கு தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமத் பைசல் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து முகமத் பைசல் கூறும்போது, “ சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அதே வேளையில் குல்பூஷண் ஜாதவ் தொடர்பான அனைத்து முடிவுகளும் பாகிஸ்தான் சட்டத்துக்கு உபட்டே எடுக்கப்படும். இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை கடந்த 2016-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, ஈரானில் பணிபுரிந்த குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் சென்று பொய் வழக்குத் தொடுத்துள்ளதாக குற்றம் சாட்டியது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கை கடந்த 17-ம் தேதி விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யும்படியும், அவருக்குத் தூதரக உதவி கிடைக்க அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டது.