Published : 13 Nov 2019 04:28 PM
Last Updated : 13 Nov 2019 04:28 PM
துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கிறார்.
ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டப் பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் துருக்கி அதிபர் எர்டோகனை தொலைப்பேசி வாயிலாக தொடர்புக் கொண்டு அமெரிக்கா வர அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ட்ரம்பின் அழைப்பை ஏற்று இன்று (புதன்கிழமை) வெள்ளிக்கிழமை ட்ரம்பை சந்திக்கிறார் எர்டோகன்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ ட்ரம்ப் - எர்டோகன் சந்திப்பில், வடக்கு சிரியாவில் குர்துகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா எஸ் - 400 ஏவுகணையை அந்நாட்டிடமிருந்து துருக்கி வாங்கியது இருவரது பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் துருக்கி சிரியா மீது தாக்குதல் நடத்திய காரணமாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை தவிர்க்க எர்டோகன் முயற்சிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சிரியா - துருக்கி எல்லைப் பிராந்தியத்திலிருந்து குர்து படைகளை முழுமையாக அகற்றுவது தொடர்பாக அமெரிக்கா அளித்த வாக்குறுதியை எர்டோகன் ஆலோசிப்ப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார் எர்டோகன்.
முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.