

பிரேசிலியா,
பிரேசிலில் நடைபெற உள்ள 11 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் தலைநகர் பிரேசிலியா வந்தடைந்தார்.
பிரேசிலியா விமானநிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து பெரிய வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய தேசிய பொருளாதார சங்கத்தின் சுருக்கமான பெயர் 'பிரிக்ஸ்'. இந்த அமைப்பின் 11வது உச்சி மாநாடு இன்று (புதன்கிழமை) பிரேசிலியாவில் தொடங்குகிறது.
பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தவும் 11வது உச்சிமாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி புதுடெல்லியிலிருந்து புறப்படும் முன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், ''ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை இந்தியா மேற்கொள்ளும். இப் பயணத்தின் இன்னொரு பகுதியாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை சந்தித்து இருதரப்பு ராஜாங்க நட்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படும்.
உச்சிமாநாட்டில் முக்கிய விவாதங்களாக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றில் உலகின் ஐந்து முக்கிய பொருளாதார நாடுகளின் ஒத்துழைப்பை கணிசமாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், பிரிக்ஸ் கட்டமைப்பிற்குள் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
பிரிக்ஸ் வணிக அமைப்புக்கான நிறைவு விழா மற்றும் உச்சிமாநாட்டின் மற்றும் தலைவர்கள் மட்டுமே பங்கேற்கும் முழுமையான அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.
இறுதிநாள் அமர்வில், சமகால உலகில் தேசிய இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது இது ஆறாவது முறையாகும், அவர் முதல் முறையாக பிரேசிலில் 2014ல் ஃபோர்டாலெஸாவில் பங்கேற்றார்
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ