

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்”என்று தெரிவித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்பு காரணமாக அப்பகுதியிலிருந்த வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தக் குண்டு வெடிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிதானில் பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் என்று அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் அங்கு தீவிரவாதத் தாக்குதல் தொடர்ந்து வருகின்றது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும், தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர்.