வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம்

ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கை நடந்த காட்சி :படம் உதவி: ட்விட்டர்
ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கை நடந்த காட்சி :படம் உதவி: ட்விட்டர்
Updated on
1 min read

வங்கதேசத்தில் மத்தியப்பகுதியான பிரம்மான்பாரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் பலியானார்கள். 60-க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரம்மான்பாரியா மாவட்டத்தில் உள்ள மண்டோபாக் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சிட்டகாங் செல்ல உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது, டாக்கா நகரில் இருந்து டுர்னா நிஷிதா ரயிலும் எதிர் எதிரே வந்தபோது மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். விபத்து நடந்தவுடன், அக்கம்பக்கத்தினர் போலீஸார், தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், ரயில்வே துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரம்மான்பாரியா மாவட்ட போலீஸார் துணை ஆணையர் ஹயத் உத் டவுலா கான் கூறுகையில், " முதல்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநர் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே 12 பயணிகள் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

உள்ளூர் போலீஸார் நிலையத்தின் அதிகாரி ஷயாமால் கந்தி தாஸ் கூறுகையில், " ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கருதுகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே துமா-நிஷிதா ரயில் ஓட்டுநர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக 4 குழுக்களை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமிது, பிரதமர் ஷேக் ஹசினா, சபாநாயகர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தாருக்கு தங்களின் இரங்கலையும், காயமடைந்த பயணிகள் விரைவாகக் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in