

பெய்ஜிங்
சீனாவின் யுனான் மாகாணத்தில் மியோ பழங்குடியின மக்கள்பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா நடத்துவதைபாரம்பரியமாகக் கொண்டுள்ளனர்.
இதன் மூலம் நோய்கள், கெட்ட சகுனம் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இவர்கள் வசிக்கும் நகரம், கிராமங்களில் கண்டிப்பாக குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருக்கும். யுனான் மாகாண தலைநகர் குன்மிங் அருகேயுள்ள மியோநகரில் மியோ இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
மலைவாழ் பிரதேசமான இந்த நகரம் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கடந்த 5-ம் தேதி குன்மிங் அருகேயுள்ள மியோ நகருக்கு சுற்றுலா சென்ற ஒரு பெண், அங்குள்ள குளத்தின் அழகை கேமராவில் வீடியோ எடுத்தார். அப்போது, ஏரியின் விளிம்பில் மனித முகம் கொண்ட ஒரு மீன் நீந்தி வந்தது. அந்த மீனுக்கு மனிதர்களை போன்று வாய், மூக்கு, கண்கள் இருந்தன. சுமார் 15 விநாடிகள் தலையை உயர்த்தி ஏரியில் நீந்திய மீனை அந்த பெண் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டில் பிரிட்டனிலும் கடந்த 2011-ம் ஆண்டில் தைவானிலும் மனித முகம் கொண்ட மீன்கள் தென்பட்டுள்ளன. ஆனால் அவற்றைவிட மியோ நகர குளத்தில் நீந்திய மீன் அச்சு அசலாக மனித முகத்தைக் கொண்டுள்ளது. இதுகுறித்து கடல்வாழ் உயிரினஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, ‘‘இது ஓர் அரிய உயிரினமாக இருக்கக்கூடும்’’ என்று தெரிவித்தனர்.