Published : 11 Nov 2019 11:10 AM
Last Updated : 11 Nov 2019 11:10 AM

இரண்டாவது அணு உலை கட்டுமானத்தைத் தொடங்கிய ஈரான்

அமெரிக்காவின் கண்டனத்துக்கு இடையே இரண்டாவது அணு உலை கட்டுமானத்தை துறைமுக நகரமான புஷெரில் தொடங்கியுள்ளது ஈரான்.

அணு உலை கட்டுமானத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை கடுமையாக விமர்சித்தனர். மேலும் தங்கள் நாட்டின் கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தையும் ஈரான் அதிகாரிகள் விமர்சித்தனர்.

இரண்டாவது அணு உலை கட்டுமானம் குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, “இந்த அணு உலை ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. அணுசக்தி நமக்கு நம்பகமான மின்சாரத்தை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு மின் நிலையமும் 11 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சேமிக்கிறது” என்று தெரிவித்தனர்.

மூன்றாவது அணு உலை உருவாக்கம் குறித்து திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும் புஷெரில் தொடக்கப்பட்டுள்ள அணு உலை ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x