என் மகன் சிறையிலேயே இறக்கலாம்: அசாஞ்சே தந்தை எச்சரிக்கை

என் மகன் சிறையிலேயே இறக்கலாம்: அசாஞ்சே தந்தை எச்சரிக்கை
Updated on
1 min read

எனது மகன் சிறையிலேயே இறக்கலாம் என்று விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவின் தந்தை தெரிவித்துள்ளார்.

அசாஞ்சேவின் தந்தை ஜான் ஷிப்டன் இரு நாட்களுக்கு முன்னர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் சிறையில் சந்தித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஜான் ஷிப்டன் ஜெனிவாவில் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவின் போர் குற்றங்களை வெளியிட்டதற்காக எனது மகன் அசாஞ்சே 9 வருடத் துன்புறுத்தலுக்குப் பிறகு சிறையில் இறக்க நேரிடலாம். நான் இந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இது உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா தொடர்பான பல தரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்களை, பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்தது.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இ-மெயில் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அவர் மீது குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து அசாஞ்சேவுக்கு இணைய வசதி மறுக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து 47 வயதான ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏப்ரல் 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in