

மறு கட்டமைப்பு செய்யப்பட்ட கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) அறிவிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சை, விரைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கூகுள் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். கூகுளில் புதிய பொறுப்புக்காக எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு ட்விட்டரில் பதில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, “உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. விரைவில் உங்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி, சிலிக்கான் வேலிக்கு பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் கூகுள் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் பிச்சையின் புதிய பொறுப்பு குறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா, ஆப்பிள் தலைவர் டிம் குக் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் செயல் தலைவர் எரிக் ஸ்க்மித் ட்விட்டரில், “சுந்தரின் தொலைநோக்கு சிந்தனை புத்திசாலித்தனம் ஆகியவை நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் மிகச்சிறந்த சிஇஓ-வாக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில், வெள்ளையர் அல்லாத முதல் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கு, கூகுள் மேப் இணை படைப்பாளர் பிரெட் டெய்லர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எரிக் ஸ்க்மித் மற்றும் இணை நிறுவனர் லாரி பேஜைத் தொடர்ந்து கூகுளின் மூன்றாவது சிஇஓ சுந்தர் பிச்சை ஆவார்.