Published : 09 Nov 2019 02:43 PM
Last Updated : 09 Nov 2019 02:45 PM
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீ காரணமாக நாசமாகி உள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில், ”ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகி உள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
மேலும், காட்டுத் தீ பரவலைத் தொடர்ந்து சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் அளவிலான காடுகள் நாசமாகியுள்ளன. இதனால் வனவிலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிகளில் நிலவும் தண்ணீர்பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகளின் வாழ்வாதாரம் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வருகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீ இது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.