Published : 09 Nov 2019 01:33 PM
Last Updated : 09 Nov 2019 01:33 PM

இரண்டாம் உலகப்போரின் 75-ம் ஆண்டு தினம்; ரஷ்யாவின் வெற்றி விழாவில் ட்ரம்ப்?

வாஷிங்டன்,

ரஷ்யாவின் 75-வது ஆண்டு வெற்றி தின ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள நிலையில், அப்போது அமெரிக்காவில் தேர்தல் பிரச்சார நேரம் என்பதால் விழாவில் கலந்துகொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு 2020 மே மாதத்தில் ராணுவ அணிவகுப்பு விழாவை மாஸ்கோவில் விமரிசையாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள வேண்டும் என்று ரஷ்யா விரும்பியுள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு ட்ரம்ப்புக்கு புதின் அழைப்பு விடுத்ததாகவும், தான் கலந்துகொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ட்ரம்ப் ஊடகங்களிடம் பேசியதாக சினுவா ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஊடகங்களிடம் இன்று கூறியதாவது:

''அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து நான் இன்னும் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ததில்லை. 1945-ல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளை ரஷ்யா வென்ற 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ரஷ்யாவின் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நடைபெறும் ராணுவ அணிவகுப்பு விழாவில் பங்கேற்க புதின் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக நான் புதினைப் பாராட்டுகிறேன்.

அவர் அழைப்பு விடுத்துள்ள நேரம் எங்களுக்கு அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக உள்ள நேரம். எனவே என்னால் அவரின் அழைப்பை ஏற்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் என்னால் முடிந்தால் நிச்சயம் ரஷ்ய விழாவில் கலந்துகொள்ள செல்வதையே விரும்புகிறேன்''.

இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x