

இராக்கில் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நவம்பர் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் போராட்டக்காரர்கள் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராக் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இராக் மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை கூறும்போது, “இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அமைதியின்மை நிலவுகிறது. இதில் நவம்பர் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடந்த போராட்டங்களில் போராட்டக்காரர்கள் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராக்கில் கடந்த திங்கட்கிழமை முதல் ஷியா முஸ்லிம் அதிகம் உள்ள நகர்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஷியா மதகுருமார்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் தொடங்கிய இப்போராட்டத்தில் தற்போது வரை 269 பேர் பலியாகியுள்ளனர். 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து இராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.