

இந்தியா - அமெரிக்கா இடையே நல்ல முறையிலான உறவு நீடிப்பதாகவும், மோடி எனது சிறந்த நண்பர் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான உறவு தற்போது எவ்வாறு உள்ளது என்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”அமெரிக்கா இந்தியாவுடன் பல்வேறு விஷயங்களைக் கையாண்டு வருகிறது. இந்தியாவுடன் எங்கள் உறவு நல்ல முறையில் உள்ளது. இந்தியப் பிரதமர் மோடி என்னுடய சிறந்த நண்பர். நீங்கள் இதை ஹாஸ்டனில் மோடியுடன் நான் கலந்து கொண்ட நிகழ்வில் பார்த்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்தில் நிலவிய வர்த்தக ரீதியான பதற்றங்களைத் தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக்கபூர்வமான முறையில் கூறி இருப்பது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் சார்ந்த உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா மீது இந்தியா விதித்து வரும் வரிகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறி, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வர்த்தகச் சலுகைகளை ஜூன் மாதத்தில் ரத்து செய்தார். இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான பதற்ற நிலை உண்டானது.
மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா, பாதாம் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 28 அமெரிக்கத் தயாரிப்புகளுக்கு வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.