

கைது செய்யப்பட்ட ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மனைவியிடமிருந்து ஐஎஸ் அமையின் உள் செயல்பாடுகள் குறித்த நிறைய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் முதல் மனைவி ரானியா மக்மூத். இவரை சிரிய எல்லையில் 10 பேருடன் துருக்கி அதிகாரிகள் கடந்த வருடம் கைது செய்தனர்.
இந்நிலையில் இராக் அதிகாரிகள் அளித்த பாக்தாதியின் குடும்ப மரபணு மாதிரியின் மூலம் ரானியா மக்மூத் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் கூறும்போது, ''நாங்கள் பாக்தாதியின் மனைவியின் உண்மையான அடையாளத்தை விரைவாக கண்டுபிடித்தோம். அவர் பாக்தாதி குறித்தும் ஐஎஸ் அமைப்பின் உள் செயல்பாடுகள் குறித்த நிறைய தகவல்களைக் கூற முன் வந்தார். மேலும் நாங்கள் ஏற்கெனவே அறிந்த பல விஷயங்களை அவரின் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது'' என்று தெரிவித்தனர்.
முன்னதாக, சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அசாஸ் நகரில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் மூத்த சகோதரி ரஸ்மியா அவாத் (64 வயது) வசித்து வந்தார். அவரை திங்கட்கிழமை மாலை துருக்கி அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர்
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாக்தாதி உயிரிழந்தார்.