Published : 07 Nov 2019 03:12 PM
Last Updated : 07 Nov 2019 03:12 PM

'காதுக்குள் ஏதோ ஊர்வது மாதிரி இருக்கு': சீன இளைஞருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு அதிர்ச்சி

பெய்ஜிங்

சீனாவில் இளைஞர் ஒருவரின் காதில் 10 கரப்பான்பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், நீண்ட போராட்டத்துக்குப்பின் அவற்றைக் காதில் இருந்து நீக்கிய சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் குவான்டாங் மாநிலம், ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் லிவ். இவரின் காதுக்குள் ஏதோ ஊர்வது போன்றும், சுரண்டுவது போன்றும் உணர்ந்துள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறிய லிவ், காதுக்குள் ஏதாவது இருக்கிறதா என்றும் பார்க்கக் கூறியுள்ளார். ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நேரம் செல்லச் செல்ல லிவ்க்கு தலைவலியும், காதுவலியும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அருகில் உள்ள சான்ஹே மருத்துவமனையில் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவரிடம் லிவ் சிகிச்சைக்குச் சென்றார். தனது ஏற்பட்ட நிலையை லிவ் மருத்துவர் ஹாங் யிஜினிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் லிவ்வின் காதை பரிசோதித்த மருத்துவர் ஹாங் யிஜினுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால், இளைஞர் லிவ் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10க்கும் மேற்பட்ட குட்டிகளும் உள்ளே வசித்துவருவதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

உடனடியாக சிறப்புக் கருவிகள் கொண்டு ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக லிவ் காதில் இருந்து மருத்துவர் யிஜின் அகற்றினார். தாய் கரப்பான் பூச்சியை அகற்றமுடியாமல் சிரமப்பட்ட நிலையில் முதலில் ஒரு களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் பெரிய கரப்பான் பூச்சியை அகற்றியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் யிஜின் நிருபர்களிடம் கூறுகையில் " என்னிடம் வந்து சிகிச்சை பெற்றவர்களில் லிவ் வித்தியாசமான நோயாளி. இவரின் காதுக்குள் ஒரு பெரிய கரப்பான்பூச்சியும், 10க்கும் மேற்பட்ட குட்டிகளும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த தாய் கரப்பான் பூச்சி காதின் உட்பகுதிகளை சுரண்டுவது, கடிப்பதால்தான் லிவ்வுக்கு வலியும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்துக்குப்பின் அந்த தாய் கரப்பான் பூச்சியை அகற்றினோம். லிவ்விடம் விசாரித்தபோது, அவரின் படுக்கைக்கு அருகே மீதி சாப்பாட்டையும், உணவுப் பொட்டலங்கள், திண்பண்டங்களை வைத்துவிடுவார்.

இதனால் அதைச்சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கிறது. பொதுவாக உணவுச் சுத்தம், உறைவிடச் சுத்தம் இல்லாமல் இருப்பதால் கரப்பான் பூச்சிகள் வரும். சுத்தமாக இருப்பதன் மூலம் கரப்பான்பூச்சிகள் வராமல் தடுக்க முடியும்.ஆனால், எத்தனை நாட்களாக லிவ் காதுக்குள் கரப்பான் பூச்சிகள் இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை " எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு பெண்ணின் காதில் ஒரு கரப்பான் பூச்சி 9 நாட்களாக வாழ்ந்து வந்துள்ளது. ஒருநாள இரவு காதில் இருந்து ஏதோ கறுப்பாக ஊர்வதை உணர்ந்த அந்த பெண் எடுத்துப் பார்த்தபோது அது கரப்பான் பூச்சியின் கால் எனத் தெரிந்து அலறினார். அதன்பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அந்த கரப்பான் பூச்சியை அகற்றினார்கள். விசாரணையில் 9 நாட்களாக அந்த பெண்ணுக்குக் காதுக்குள் ஏதோ உறுத்தல் இருந்ததாகவும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார் எனத் தெரிவித்தார்

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x