

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபாசோவில் சுரங்க நிறுவனத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “புர்கினோ ஃபாசோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சுரங்க கம்பெனி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சுரங்கப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களில் புர்கினோ ஃபாசோவில் நடத்தப்பட்ட மூன்றாவது மோசமான தாக்குதல் இது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரெஞ்சு காலனியான புர்கினா ஃபாசோ, உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடாகும். இந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இஸ்லாமியப் போராளிகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
2015க்கு முன் எந்தவித வன்முறையும் இல்லாதிருந்த இந்நாட்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்குப் பகுதியில் தொடங்கிய ஜிகாதிகளின் கிளர்ச்சி வேகமாக கிழக்கை நோக்கி அண்டை நாடான புர்கினா ஃபாசோவிற்கும் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.