ஏமன் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அறிவிப்பு

ஏமன் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் அறிவிப்பு

Published on

ஏமன் அரசுக்கும் அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் இடையே சவுதி தலைமையில் அமைதிக்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் அரசுக்கும் ஐக்கிய அமீரகம் ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரசு தொலைக்காட்சியில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தம் குறித்து சவுதி இளவரசர் சல்மான் கூறும்போது, “ஏமனில் நான்கு ஆண்டுகளாகத் தொடரும் போருக்கு அரசியல்ரீதியாக முக்கியத் தீர்வாக இந்த ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஏமனில் புதிய சூழல் உருவாகும். சவுதி அரேபியா உங்களுடன் துணை நிற்கிறது. இது ஒரு மகிழ்ச்சிகரமான நாள்” என்றார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in