

லண்டனில் 39 பேரின் உடல்கள் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக வியட்நாமில் 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த இயமன் ஹாரிசன் (23) என்பவர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஹாரிசன் மீது கொலை, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக குடியேற்றத்துக்கு உதவி செய்ததில் சதி உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கில் வியட்நாமில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வியட் நாம் போலீஸார் தரப்பில் , “விசாரணையின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கபூர்வமாக விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.