டிக் டாக் மோகத்தில் இளைஞர்கள்: சீன வீடியோ ஆப்-ஐ விசாரிக்க அமெரிக்கா உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வாஷிங்டன் | ஏபி

டிக் டாக் மீது 'தேசிய பாதுகாப்பு' மதிப்பாய்வு செய்து விசாரணை மேற்கொள்ளும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் சி.எஃப்.ஐ.யு.எஸ் (அந்நிய நிதி மக்கள் பாதுகாப்புக்குழு), டிக் டாக் செயலி குறித்த நாடு தழுவிய ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது குறித்து ராய்ட்டர்ஸ், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக வலைதளங்களில் இணைக்கப்பட்டுள்ள டிக் டாக் ஆப்கள், 'உங்கள் நாளை உருவாக்குங்கள், உண்மையான மக்கள், உண்மையான வீடியோக்கள்' என்று முத்திரை வாக்கியங்களை முன்னிறுத்தி பயனர்களை தன்னுள்ளே இழுத்துவருகிறது. உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் இதில் இயங்கி வருகின்றனர்.

பேசுவதற்கு மட்டும்தான் செல்போன் என்ற நிலை மாறி பல்வேறு கேளிக்கைகளுக்கும் தற்போது அதன் பயன்பாடு மாறிவருகிறது. டிக் டாக் அறிமுகமாகி மூன்று வருடங்களே ஆனநிலையில் உலகமெங்கும் அதன் தாக்கம் தனிமனித வாழ்வில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதில் பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உண்டு.

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான டீன்ஏஜ் பயனர்கள் மற்றும் இளைஞர்களிடையே டிக் டாக் மோகம் அதிகரித்து வருகிறது. இதனை நிச்சயம் நேர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கருதிய அமெரிக்க அரசு தற்போது டிக் டாக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் டிக் டாக் தணிக்கை மற்றும் தரவு சேகரிப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கண்டு அமெரிக்க எம்பிக்கள் கவலை தெரிவித்துள்ளதை அடுத்து இந்த ஆய்வுக்கும்விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டாக் ஆய்வில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் அந்நிய முதலீடு தொடர்பான மக்கள் பாதுகாப்புக் குழுவின் (சி.எஃப்.ஐ.யு.எஸ்) கருவூலத் துறை, தற்போது உடனடியாக எந்தக் கருத்தையும் கூறவில்லை என்று சொல்லப்பட்டாலும் அது விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிக் டாக் உரிமையாளர் பைட் டான்ஸ் கூறுகையில், ''தற்போது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அமெரிக்க பயனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது எங்கள் தற்போதைய முன்னுரிமை'' என்றார்.

டிக் டாக்க்கின் உரிமையாளர் பைட் டான்ஸ், 2017 இல் Musical.ly-யை வாங்கி அதை டிக் டாக்குடன் இணைத்தார். Musical.ly ஷாங்காய் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள அலுவலகங்களுக்கு வெளியே இயங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in