

மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவில் 30,000 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத சடலங்கள் உள்ளதாகவும் மற்றும் எலும்புக்கூடுகள் நாடு முழுவதும் சவக்கிடங்குகளில் குவிந்து கிடப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து மெக்சிகோ அரசாங்கத்தின் தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளதாவது:
மெக்சிகோவில் 30,000 க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத சடலங்கள் உள்ளன. இதுதவிர வெறும் எலும்புக்கூடுகளும் ஆயிரக்கணக்கில் சவக்கிடங்குகளில் கிடப்பில் உள்ளன.
அதற்குக் காரணம் தடயவியல் அடையாளம் காணும் துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே ஆகும். அடையாளங் காணப்பட வேண்டிய சடலங்களை, சரியாக உடற்கூறு ஆய்வு செய்ய போதிய நிதி வசதி, பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாதது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
கடந்த பத்தாண்டில் மெக்சிகோவில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு குற்றங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறைகளின் சட்டம் ஒழுங்கை மீறி நடத்தும் படுகொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2018 ஆம் ஆண்டில், மேற்கு மெக்சிகோ நகரமான குவாடலஜாராவில் ஒரு குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் அடையாளம் காணப்படாத சடலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து வந்த துர்நாற்றத்தை வைத்து உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் பேரில் 273 சடலங்களை போலீஸார் கைப்பற்றினர்.
மெக்ஸிகோவின் மேற்கில் உள்ள ஓர் உள்ளூர் சவக்கிடங்கில் இடநெருக்கடி ஆகும் அளவுக்கு சடலங்களின் நெரிசல் மிகவும் அதிகமானது. இதனால் சரியாக பராமரிக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் சில அடையாளம் தெரியாத உடல்கள் பிரேத பரிசோதனைக்கு முன்னரே இரண்டு ஆண்டுகளாக அழுகத் தொடங்கின.
உடற்கூறு ஆய்வுக்கு வரும் சடலங்கள் குவிந்துவருவதால் அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட வழிவகுத்துள்ளது. நிலையை சமாளிக்க முடியாமல் நிர்வாகமும் அதிகாரிகளும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மெக்சிகோ அரசின் தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.