

பாக்தாத்
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மரணமடைந்ததை உறுதிப்படுத்தியுள்ள அந்த அமைப்பு, அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி புதிய தலைவராக செயல்படுவார் என அறிவித்துள்ளது.
சிரியா மற்றும் இராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இராக் கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.
இதன் முதல்கட்டமாக, சில ஆண்டு களுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் சுருக்கி கொண்டனர். சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதன் தலைவராக இருந்து வந்தவர் இராக்கை சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48).
இந்நிலையில், சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அல்- பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கட்டிடத்துக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார்.
தாக்குதலுக்குப் பின்னர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் உடலை அமெரிக்க ராணுவத்தினர் கடலில் அடக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எந்த கடல் பகுதியில் பாக்தாதி உடல் வீசப்பட்டது? எந்த நேரம் வீசப்பட்டது? என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்தநிலையில் அல்பாக்தாதி இறந்ததை ஐஎஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‘‘தலைவர் அல்பாக்தாதிக்கு அஞ்சலி புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி செயல்படுவார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.