

இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
ரயில் தீ விபத்து குறித்து ஊடகங்கள், “ பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரகிம் யார் கான் பகுதிக்கு அருகே லியாகட்பூர் நகரில் கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
ரயிலில் ஏற்பட்ட தீ தொடர்ச்சியாக 3 பெட்டிகளிலும் மளமளவெனப் பரவியது. இதன் காரணமாக ரயிலில் இருந்தவர்கள் தீயிலிருந்து தப்பிக்க வெளியே குதித்தனர். இந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 - ஆக தற்போது அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ராஷித் கூறும்போது, “சமையல் அடுப்புகள் இரண்டு வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட ரயில்வே தடம் இரண்டு மணி நேரத்தில் சரியாகும்” என்றார்.
சமீபத்தில் ஏற்பட்ட மோசமான ரயில் தீ விபத்தாக இது கருதப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானில் 2005-ம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.