சிரியா - துருக்கிப் படைகள் மோதல் 

 சிரியா - துருக்கிப் படைகள் மோதல் 
Updated on
1 min read

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து ஏஎன்ஐ , “போர் நிறுத்த ஒப்பந்ததிற்குப் பிறகு குர்து படைகள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கி உள்ளனர். இந்த நிலையில் சிரியா - துருக்கி எல்லையில் உள்ள ராஸ் அல் அய்னா பகுதியில் துருக்கி - சிரிய ராணுவ படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரிய - துருக்கி படைகள் மோதலால் இரு நாடுகள் எல்லைப் புறத்தில் பதற்றம் நிலவுகிறது.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்ற நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப, துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in