Published : 31 Oct 2019 02:36 PM
Last Updated : 31 Oct 2019 02:36 PM

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியைத் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியீடு

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்படுவதற்கு முன்னர் அவரை அமெரிக்கப் படையினர் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இராக்கைச் சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதியின் வயது 48.

சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பாக்தாதி இறந்த செய்தியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் அபுபக்கர் அல் பாக்தாதியைத் தேடும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

மேலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் கருப்பு வெள்ளையில் உள்ளன. அதில் ஒரு வீடியோவில் வடக்கு சிரியாவில் பாக்தாதி பதுங்கி இருந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவர்களை நோக்கி அமெரிக்க ராணுவப் படையினர் ஓடுகின்றனர். மற்றொரு காட்சியில் குண்டுவெடிப்புக் காட்சி பதிவாகியுள்ளது.

குண்டுவெடிப்புக் காட்சி குறித்து அமெரிக்க ராணுவத் தளபதி கென்னத் மெகன்சி கூறும்போது, “தாக்குதல் நடத்தப்பட்டு அனைவரும் வெளியேறிய பின்பு இந்தக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தாக்குதலின்போது பாக்தாதி தன்னுடன் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இரண்டு குழந்தைகளும் 12 வயதுக்குட்டப்பவர்கள்” என்றார்.

மேலும், இறப்பதற்கு முன் பாக்தாதி கண்ணீர் விட்டு அழுதார் என்ற ட்ரம்ப்பின் கருத்துக்கு மெகன்சி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x