கேமரூனில் நிலச்சரிவின் காரணமாக மலை விளிம்பிலிருந்த வீடுகள் சரிந்ததில் 33 பேர் பலி

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகள்
Updated on
1 min read

யவுண்டே

மேற்கு கேமரூன் நகரமான பாபூசத்தில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூன் நைஜீரியாவுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காலப் பருவம் முடிந்த பிறகும் தொடர்ந்து பலத்த மழை தொடர்கிறது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது கேமரூனின் அண்டை நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிட்டத்தட்ட 30,000 மக்களை இடம்பெயர வைத்துள்ளது.

மேலும் கிழக்கில், தெற்கு சூடானில், ஜூலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் பலத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு குறித்து மேற்கு பிராந்தியத்தின் ஆளுநர் ஆவா ஃபோன்கா அகஸ்டின் கேமரூன் வானொலி தொலைக்காட்சியில் (சிஆர்டிவி) கூறியதாவது:

"நேற்றிரவு கடும் மழை காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 12 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரவில் நிகழ்ந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுகிறோம். இரவில் தூங்கிக் கொண்டிருந்த பல குழந்தைகளும் உயிரிழந்திருக்கக் கூடும். இன்னும் மீட்கப்பட வேண்டிய உடல்கள் நிறைய உள்ளன.

இதில் குறைந்தது இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 51 வயதான பியர் கெம்வே தனது கர்ப்பிணி மனைவியை இன்னும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் முக்கியமான ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மழையின் காரணமாக நிலச்சரிவில் இடிந்து விழுந்த வீடுகள் அனைத்தும் மலையின் ஓரத்தில் ஆபத்தான இடத்தில் கட்டப்பட்டிருந்தது ஒரு காரணம். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை இப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் இப்பகுதி மிகவும் ஆபத்தானது’’.

இவ்வாறு மேற்கு பிராந்திய ஆளுநர் தெரிவித்தார்.

ஏஎப்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in