

இராக்கில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் பலியாகினர்.
இதுகுறித்து இராக் ஊடகங்கள், “இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித நகரமான கெர்பலாவில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்17 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக, மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதில் திங்கட்கிழமையன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராக் தலைநகர் பாக்தாத் மற்றும் பஸ்ரா, மாய்சன் ஆகிய நகரங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர இராக் பாதுகாப்புப் படையினரும் முயன்று வருகின்றனர்.
அக்டோபர் மாதம் மட்டும் இராக்கில் நடத்தப்பட்ட கலவரங்களில் 250 பேர் பலியாகி உள்ளனர் என்று இராக் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.