Published : 29 Oct 2019 01:49 PM
Last Updated : 29 Oct 2019 01:49 PM

பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா, சவுதி இடையிலான கூட்டுறவு வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி நம்பிக்கை

ரியாத்


இந்தியாவும், சவுதி அரேபியாவும் தீவிரவாதத்தைக் கூட்டாக எதிர்ப்பது, பாதுகாப்பு விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவதில் கூட்டுறவு வளர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சவுதி அரேபியாவுக்கு 2 நாட்கள் பயணமாகப் பிரதமர் மோடி சென்றுள்ளார். திங்கள்கிழமை இரவு சவுதி அரேபியாவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்கால முதலீடு தொடக்க மாநாட்டில், இந்தியா அடுத்த திட்டம் என்ற பெயரில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

இதற்கிடையே சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேச உள்ளார். இரு தலைவர்களுடன் சந்திப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன.

மேலும், இந்த மாநாட்டின்போது, பிரதமர் மோடி முதலீட்டாளர்கள், அரசின் உயர் அதிகாரிகள் , தொழில்துறைத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து பேச உள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மோடி சவுதியில் வெளியாகும் அரப் நியூஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஆசியாவில் வலிமை மிக்க நாடுகளான இந்தியாவும், சவுதி அரேபியாவும் தங்களின் அண்டை நாடுகளால் ஒரேமாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. (பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடவில்லை). இதுநாள் வரை சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே வர்த்தக ரீதியாக, விற்பனையாளர் வாங்குவோர் என்ற உறவுதான் பிரதானமாக இருந்து வந்தது.

ஆனால், தற்போது குறிப்பாகத் தீவிரவாத தடுப்பு, பாதுகாப்பு, ராஜாங்க ரீதியான உறவுகளில் கூட்டுறவோடு இரு நாடுகளும் வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ரியாத்துக்கு சென்று ஆக்கப்பூர்வமான சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

பாதுகாப்பு கூட்டுறவில் இருநாடுகளும் கூட்டுக்குழு அமைத்து சீரான இடைவெளியில் சந்தித்து கூட்டம் நடத்த உள்ளோம். பாதுகாப்பு, ராணுவம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் சார்ந்து பணியாற்ற பல்வேறு இடங்களைக் கண்டுபிடித்துள்ளோம்.

பாதுகாப்பு கூட்டுறவு, ஆயுதத் தளவாடங்கள் தயாரிப்பு தொழிலில் கூட்டாகச் செயல்படுவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளோம். ஜி20 அமைப்பில் இருநாடுகளும் இடம் பெற்றுள்ளதால், தங்களின் நாடுகளில் சமத்துவமின்மையைக் குறைத்து, நிலையான வளர்ச்சியை அதிகரிக்க ஒன்றாக இணைந்து செயலாற்ற முடிவு செய்துள்ளோம்.

என்னுடைய அரசின் வெளியுறவுக்கொள்கையின் முக்கிய நோக்கமே, அண்டைநாட்டுக்கு முதலில் முக்கியத்துவம் அளித்தல் என்ற அடிப்படையிலிருந்து வருகிறது. சவுதி அரேபியாவுடன் இந்தியாவின் நட்புறவு இருதரப்பு உறவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

ஆசிய மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா சமூகமான உறவுகளை வைத்துள்ளது. ஆசியப் பிராந்தியத்தில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாற்றவும், தொழில், வர்த்தகம் செய்ய ஏற்ற நாடாக மாற்ற எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகப் பொருளாதார வளர்ச்சி, நிலைத்த வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது என்பதை உறுதி செய்து வருகிறோம்.

எங்களின் நடவடிக்கை காரணமாக, எளிதாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் கடந்த 2014-ம் ஆண்டில் 142-வது இடத்தில் இந்தியா இருந்த நிலையில்,2019-ம் ஆண்டில் 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்வச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட்அப் இந்தியா ஆகிய திட்டங்களை உருவாக்கி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் சவுதி அரேபியாவின் முதலீட்டை வரவேற்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

பிடிஜ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x