

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர்கள் என 20 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் துருக்கி கைது செய்துள்ளது.
இதுகுறித்து துருக்கி அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை துருக்கி தலைநகர் அங்காராவில் திவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஐஎஸ் தீவிரவாதிகளால் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று. இதன் காரணமாக ஐஎஸ் தீவிரவாதிகள் பரவலை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்களை துருக்கி எடுத்து வருகிறது.
முன்னதாக ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியும், ஐஎஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டனர் இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை துருக்கி எடுத்துள்ளது.
முன்னதாக துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வடக்கு சிரியாவிலுருந்து வாபஸ் பெற்ற நிலையில் குர்து படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.